Sunday 2 October 2011

காந்தியும் என் வலைப்பூவும்

இந்த வலைப்பூவை வடிவமைத்தது மூன்றாண்டுகளுக்கு முன்பு. தொடர்ந்து எழுத முடியாதவன் எதற்காக எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற தயக்கம் இத்தனை காலமும் யாருக்கும் தெரிவிக்காமல் மூடிவைத்திருந்ததற்கு முக்கியக் காரணம். சந்திரமோகனுக்கு மட்டும்தான் என் வலைப்பூ முகவரி தெரியும். அப்படியிருந்தும் யாரோ ஒருவர் இதைத் தொடர்ந்திருக்கிறார் என்பது எனக்கே வியப்பளிக்கிற விஷயம். நண்பர்கள் சிலர் வலைப்பூவில் எழுதும்படி எனக்கு பலமுறை ஆலோசனை அளித்தார்கள். நான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கிறேன் என்று தெரிந்தவர்கள் முகவரி கேட்டார்கள்.

கணினி பற்றி எதுவுமே தெரியாமல், 1995-96இல் 386 கணினி வாங்கி முதல் முதலாகத் தொட்டுப்பார்த்து நாள் முதல் தொடங்கி, நாளுக்கு 8 - 10 - 12 என்று அதிகரித்துக்கொண்டே போய் இன்று நாளில் சராசரியாக 14 மணி நேரம் கணினியின் முன் கழிகிறது. ஆனாலும் வலைப்பூவில் எழுதுகிற அளவுக்கு நேரம் ஒதுக்க முடியாத வாழ்க்கைப் பணிச்சூழல். எழுதினால் தொடர்ந்து எழுத வேண்டும், வருகிற பின்னூட்டங்களுக்குப் பதிலளிக்க வேண்டும், நான் ஏதேனும் எழுதப்போக, யாரேனும் சாடினால் அவர்களுக்குப் பதிலடியும் கொடுக்க வேண்டும், இதெல்லாம் நமக்கு ஆகிற காரியமா...

அத்துடன், நான் நல்ல வாசகன்தான். படைப்பாளன் அல்ல என்று எனக்கே தெரிந்த உண்மையும் என்னைத் தடுத்தது. தன் குழந்தையின் சிறு சாதனைக்கும்கூட அன்போடு அணைத்து உச்சிமோந்து முத்தம் கொடுக்கும் தாய்-தந்தையைப் போல, நல்ல எழுத்தைப் படித்ததும் அந்தப் புத்தகத்துக்கு நெகிழ்ச்சியோடு முத்தம் கொடுக்கும் வாசகன்தான் நான்.

இவற்றுக்கிடையேதான் இன்று அக்டோபர் 1 மாலை திடீரென்று தோன்றியது - அக்டோபர் 2ஆம் தேதி என் வலைப்பூவைப் பகிரங்கப்படுத்தலாம் என்று.  இதற்கு முந்தைய பதிவுகள் பலதரப்பட்டவை - பகத்சிங்கின் நூல், விளையாட்டு உலகம், தில்லியின் உலகப் புத்தகக் கண்காட்சி, நூல் அறிமுகங்கள். இவையே பெரும்பாலும் என் முகத்தைக் காட்டிவிடும்.

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு ஏதேனும் முக்கியக் காரணம் உண்டா... இருக்கு, ஆனா இல்லை. ஏதேனுமொருநாள் இதைச் செய்ய வேண்டும், அது காந்தி பிறந்த நாளாக இருக்கட்டும் என்பதுதான் காரணம். அத்துடன், காந்தி எனக்கு எப்போதும் ஒரு புதிராக, ஒரு ஆதர்சமாக, கேள்விகள் எழுப்புபவராக, இருப்பவர்.

சுமார் நாற்பது-நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் எனக்குக் கிடைத்த பரிசு - சத்திய சோதனை. பள்ளிப் பருவத்திலேயே தீவிர வாசகனாக - கவனிக்கவும், தீவிர வாசகன்தானே தவிர தீவிர எழுத்துகளின் வாசகன் இல்லை - இருந்தாலும் சத்தியசோதனை என் மூளைக்கு எட்டவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துப் பயணங்களின்போது படிப்பதாகப் பாவனை காட்டுவதற்கு அந்த நூல் சில காலம் பயன்பட்டது. அதற்கும் சில ஆண்டுகள் கழித்துக் காணாமல் போனது.

வாழ்க்கையின் ஓட்டத்தினூடே பலஆண்டுகள் பலதையும் படித்து, குழம்பி, தெளிந்து, படித்து, தெளிந்து, குழம்பி... 1992இல் எது இந்து தர்மம் (What is Hinduism) என்ற நூலை பிழைதிருத்தம் செய்யப் படிக்கும்போது காந்தி கொஞ்சம் பிடிபட ஆரம்பித்தார். 1996இல் துவங்கி இன்றுவரை முடிக்கப்படாமல் என்னிடமே இழுத்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் (Mind of Mahatma) என்னும் நூலை திரும்பத் திரும்பப் படித்து, பிழைதிருத்தி, செப்பனிட்டு வந்த காலத்தில் காந்தியை இன்னும் கொஞ்சம் புரிய முடிந்தது. இடைப்பட்ட காலங்களில் தொழில்முறையில் காந்தியைப்பற்றி இன்னும் பல நூல்கள் படிக்கக் கிடைத்தன. காந்தியின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் இதுவும் ஒன்று.

கிட்டத்தட்ட இதே காலத்தில், பென்னேஸ்வரன் யதார்த்தாவை முனைப்பாக நடத்திய இறுதி ஆண்டுகளில் முறைப்பெண் நாடகத்தில் எனக்கும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பஞ்சாயத்துக்காரர் பாலுத்தேவராக கதர் ஜிப்பா அணிந்தேன். அதற்குப் பிறகு கதர் ஜிப்பாக்களே என் மேலாடைகளாக மாறின.  சட்டை-பான்ட்-கோட்டு என்று அணிந்து வந்தவன் கதர் மேலாடை அணியத் துவங்கியதற்குக் காரணம் காந்தி.கடும் குளிர் காலத்தில்கூட ஷூ-சாக்ஸ் அணியாமல் இருக்க இன்று பழகிப்போனதற்குக் காரணம் காந்தி.

இதுவும் ஒருவகையில் வேடம்தான் என்பதும் எனக்குத் தெரியும். கதர்தான் அணிய வேண்டுமென்றால் சட்டையே அணியலாம் இல்லையா... என் உடல்வாகுக்கு சட்டை - அதிலும் கதர் சட்டை - அணிந்தால், ஏற்கெனவே என்னை வேகமா காத்தடிச்சா பறந்து போயிடுவாரு என்று கிண்டல் செய்து மகிழும் தில்லிவாழ் எனதருமைத் தமிழ்ப்பெருமக்களுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்து விடும். அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பை மறுக்கும் ஆயுதம்தான் கதர் ஜிப்பா. இப்போது ஜிப்பா என் அடையாளமாகி விட்டது. (அத்துடன், ஜிப்பா அறிவுஜீவிகளின் அடையாளம் அல்லவா !) நான் அணிவது கதர் ஜிப்பா என்பது பலருக்கும் தெரியாது என்பதுதான் என் வருத்தம். சிலர் முஸ்லிம் ஜிப்பா என்று நினைக்கிறார்கள்.


காந்திக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என்பதே சில ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கே தெரிய வந்தது. மெலிந்த தேதம் என்பது என்னை அறிந்த எவருக்கும் சட்டென ஞாபகம் வந்து விடும். அது மட்டும் ஒற்றுமைகள் அல்ல. 1994 அல்லது 1996 உலகப் புத்தகக் கண்காட்சியின்போது அதில் காந்திதான் மையக் கருத்தாக இருந்தார். சிறுவன் காந்தி, இளைஞர் காந்தி, நமக்கு அடையாளமாகிப்போன பொக்கைவாய் காந்தி என பல புகைப்படங்கள் ஆளுயரப் படங்களாக ஒரு அரங்கில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இந்தப்படமும் ஒன்று. முழு உருவப் படம் ஒன்றும் இதே போல இருந்தது. காந்தி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த படம் அது.  நான் அதன் முன்னே நின்றிருந்தேன். திடீரென்று ஒரு நண்பர் என்னை அப்படியே நிற்கச் சொன்னார்.  அவருடைய காமிராக் கண்களுக்கு சில ஒற்றுமைகள் புலப்பட்டிருக்கின்றன. மேடான நெற்றி, கோணல் மூக்கு, யானைக்காது, நீளக்கைகள்... (ஜிப்பாவைக் கழற்றினால் எலும்புகள் துருத்திய மார்புக்கூடும் தெரிந்திருக்கும் !) அவ்வளவுதான்... அன்று புத்தகக்கண்காட்சியில் என் நண்பர்கள் மத்தியில் இதுதான் பேச்சாக இருந்தது.

என்னடா இது... பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் மொழியாக்கத்தை முதல் பதிவாக வெளியிட்டவன் காந்தியைப் பற்றி எழுதுகிறானே என்று உங்களில் சிலர் குழம்பலாம். குழப்பங்கள் ஏற்பட்டால்தானே தெளிவு பிறக்கும் என்றெல்லாம் குழப்ப மாட்டேன். பகத்சிங்கை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காந்தியில் புரிய வேண்டியது இன்னும் நிறையவே இருக்கிறது. சொல்லப்போனால் காந்தியை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாரும் இருக்க முடியுமா என்பதே என் கேள்வி.

எப்போதும் உற்சாகமாக இருப்பது எப்படி என்று நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. உற்சாகமாக இருப்பது போல நடியுங்கள், அப்புறம் அதுவே பழக்கமாகி விடும் என்று எங்கோ எதிலோ படித்ததுதான் என் பதிலாக இருக்கும். அதே போல, காந்தி திடீர் உந்துதலில் ஒரு வேடம் அணிந்து கொண்டார். அதுவே அவருடைய அடையாளமாக ஆகிப்போனது. அந்த அடையாளத்துக்கென அவர் வகுத்துக்கொண்ட கொள்கைகளின்படி வாழ்வது அவர் ஏற்றுக்கொண்ட வழியாயிற்று. நானும் ஒரு வேடம் அணிந்தேன். அந்த வேடம் நான் பலகாலமாகப் போற்றி வந்த சில கொள்கைகளை இன்னும் வலுவாகப் போற்ற வேண்டியவனாக ஆக்கி விட்டது. இப்போது எனக்கு வேட உணர்வு அறவே இல்லை. நான் எப்படித் தோன்றுகிறேனோ அப்படியே இருக்கிறேன். ஒரே ஒரு குறை எனக்குள் இருக்கிறது - அந்தக் குறையையும் நீக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்கூட என்றாலும் இன்னும் எத்தனை காலம் என்னைப் பீடித்திருக்கும் அந்தக் குறை என்பது தெரியாது. சிகரெட்... சிகரெட் பற்றி ஒரு தனிப்பதிவு எழுதவும் உத்தேசம் உண்டு. வில்ஸ் பவரை வெற்றிகொள்ளும் வில் பவர் எனக்கு இல்லை. மனிதர்களை அவரவர் குறைகளோடுதான் ஏற்க வேண்டும் - இதில் என்னோடு நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கதருக்கும் எனக்கும், என் குடும்பத்துக்கும் நெருங்கிய உறவுகள் உண்டு. இவற்றைப்பற்றி பிறிதொருநாள் பதிவுகளில் எழுதுவேன் என்று நம்புகிறேன். இது சுயபுராணம் அல்ல, மூன்றாண்டுகளுக்கு முன் பதிந்து, மறைக்கப்பட்டு இப்போது வெளிவருவதால் அவசியப்படுகிற முன்னுரை - என்னுரை.

4 comments:

  1. வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.:)

    ReplyDelete
  2. 'Ennai patri' paguthiyil enakku pidicha varigal:

    "செல்பேசிப் புரட்சியே செழுமையின் சின்னமாய்க் கருதும் நடுத்தர வர்க்க மனப்போக்குகள். . . "

    "நீதி கேட்போருக்கு தண்டனைகளும் மீறுவோருக்கு சலுகைகளும் வழங்கும் நீதிமன்றங்கள். . . "

    " சர்க்கரை ஏற்றுமதி-கோதுமை இறக்குமதி - ஒரே பக்கத்தில் வரும் செய்திகளைக் கண்டும் (23 ஜூன் 2007) அதிர்வுறாத மக்கள், அரசியல்வாதிகள். ."

    "எம்மை உய்விக்க வந்த உலகமயமே என உல்லாசமாய்ப் பாடும் புதிய தலைமுறை.."

    ---

    'Gandhiyum en valaipoovum' thalaipil veliyana pathipil enakku piditha varigal:

    "பள்ளிப் பருவத்திலேயே தீவிர வாசகனாக - கவனிக்கவும், தீவிர வாசகன்தானே தவிர தீவிர எழுத்துகளின் வாசகன் இல்லை"

    "பஞ்சாயத்துக்காரர் பாலுத்தேவராக கதர் ஜிப்பா அணிந்தேன். அதற்குப் பிறகு கதர் ஜிப்பாக்களே என் மேலாடைகளாக மாறின. (is it? i thought u were wearing it when u were working for a tamil website!)

    "வில்ஸ் பவரை வெற்றிகொள்ளும் வில் பவர் எனக்கு இல்லை."

    "மனிதர்களை அவரவர் குறைகளோடுதான் ஏற்க வேண்டும் - இதில் என்னோடு நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்." - absolutely right!


    Expecting more posts from you!

    - Arivu

    ReplyDelete
  3. திரும்பவும் எழுத ஆரம்பித்திருக்கீர்கள்.
    வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.
    படிக்க ஆவலாக உள்ளேன்.நன்றி.

    ReplyDelete
  4. "எப்போதும் உற்சாகமாக இருப்பது எப்படி என்று நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. உற்சாகமாக இருப்பது போல நடியுங்கள், அப்புறம் அதுவே பழக்கமாகி விடும் என்று எங்கோ எதிலோ படித்ததுதான் என் பதிலாக இருக்கும்"
    "எப்போதும் உற்சாகமாக இருப்பது எப்படி என்று நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. உற்சாகமாக இருப்பது போல நடியுங்கள், அப்புறம் அதுவே பழக்கமாகி விடும் என்று எங்கோ எதிலோ படித்ததுதான் என் பதிலாக இருக்கும்"

    aahaa pudiyavan pudhu uruvam yeduthu meendum yezhutha aarampithuvitathil mikka makhzichi.
    வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்.. தொடருங்கள்

    ReplyDelete