Monday 7 November 2016

புகை உயிருக்குப் பகை-4

அனுபவக் கட்டுரைத் தொடர் - பகுதி 4

புகைப் பழக்கத்துக்கு எப்படி அடிமையானோம் (பகுதி-1), புகைப்பழக்கம் எவ்வாறு சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது, சிகரெட் பற்றிய புள்ளிவிவரங்கள் (பகுதி-2),  சிகரெட் வணிகம் எவ்வளவு பெரியது, அதனால் ஏற்படும் நோய்கள் என்ன (பகுதி-3) ஆகிய விவரங்களை எல்லாம் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். (இவற்றை வாசிக்காதவர்கள் பகுதி எனக் குறிப்பிட்டுள்ள இணைப்புகளின்மீது சொடுக்கி வாசிக்கலாம்.)

புகைப்பழக்கத்தை தடுக்க அரசுகள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றன. 1990களில், ரயில் பெட்டிகளில் இரண்டு சன்னல்களுக்கு இடையே ஆஷ்டிரே பொருத்தப்பட்டிருந்தது பலருக்கும் தெரிந்திருக்காது. எல்லாப் பெட்டிகளிலும் உட்கார்ந்திருந்த இடத்திலேயே புகைக்கலாம். முதலில் ஆஷ்டிரேக்கள் நீக்கப்பட்டன. பிறகு ரயிலில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டது. இப்போது பயணிகளில் எவரும் பெட்டிகளில் புகைப்பதில்லை. புகை பிடிக்க முடியாமல் தவித்துப்போய் கழிப்பறையில் அல்லது கதவோரம் நின்று யாருக்கும் தெரியாமல் புகைப்பது இப்போதும் நடக்கிறது. ஆனால் புகைக்காத / புகையை விரும்பாத சக பயணிகளுக்குத் தொந்தரவு தரும்வகையில் யாரும் புகைப்பதில்லை.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பல பெயர்கள் இருந்தன. தொலைதூரப் பேருந்துகளை இயக்கி வந்தது திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம். (இப்போது எல்லாமே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தான்.) தொலைதூரப் பயணிகள் பஸ்சில் புகைப்பதற்கு அனுமதி இருந்தது. (பயணத்தின்போது குடிப்பதற்கு தண்ணீர் புட்டிகள் காசு வாங்கத் தேவையில்லாமல், டிரைவருக்குப் பக்கத்தில் குடிநீர் டிரம் வைக்கப்பட்டிருந்த பொற்காலம் அது.) நான் சென்னையில் பணியாற்றிவந்தபோது, ஊருக்கு / ஊரிலிருந்து இரவில் பயணிக்கும்போது பேருந்தில் புகைத்தது உண்டு. இப்போது எல்லாப் பேருந்துகளிலும் முற்றிலும் தடைவிதிக்கப்பட்டு விட்டது. இதுவும் புகைக்காத சக பயணிகளுக்கு விடுதலை தந்திருக்கிறது.

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டது. திரையரங்குகளில் ஸ்லைடு மூலம் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன. திரைப்படங்களின் இடையே புகைக்கும் காட்சிகள் வரும்போது “புகைத்தல் உயிருக்குக் கேடு” என்ற வாசகங்கள் இடம்பெறச் செய்யப்பட்டது. (சமயத்தில் இது மிக அபத்தமாக இருப்பது வேறு விஷயம்.) இதேபோல பொது இடங்களில் புகைபிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு விட்டது. பூங்காக்கள் போன்ற இடங்களில் புகை பிடிப்பவர்களைப் பார்ப்பது அரிது. ஆனால் பொது இடங்கள் எவை என்பதை தெளிவாக வரையறை செய்யாததால், காவல்துறையினருக்கு கூடுதல் வருவாய்க்கு மட்டுமே இது வழிவகுக்கிறது. 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு பீடி-சிகரெட் விற்பனை செய்யக்கூடாது, பள்ளிகளுக்குப் பக்கத்தில் பீடி-சிகரெட் பெட்டிக்கடை வைக்கக்கூடாது போன்ற விதிகளும் ஓரளவு பயன் தருகிறது – காவலர்களுக்கும்.


அரசு எடுத்த மற்றொரு முக்கிய நடவடிக்கை, சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கைப் படங்களை அச்சிடச் செய்ததாகும். சிகரெட் பாக்கெட்டின்மீது புற்றுநோய் எச்சரிக்கைப் படங்களைப் பார்த்திருப்பீர்கள். (சிகரெட்டை வாங்கும்போது அந்தப் படங்கள் சில சமயங்களில் உறுத்தலை ஏற்படுத்தின என்பது தவிர, அவை என் மனதில் பெரிய அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை.) இருப்பினும், பட எச்சரிக்கைகளால்  பயன் இருக்கிறது என்று நம்பலாம். சிகரெட் பெட்டியின்மேல் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டபோது, படம் 40% இடத்தைப் பிடித்திருக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருந்தது. 2016 ஏப்ரல் முதல், அபாய எச்சரிக்கைப் படம் 85% இடம் பிடிக்கிறது.


எச்சரிக்கைப் படத்துக்கு 85% மிகவும் அதிகம், 50% ஆகக் குறைக்கலாம் என்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் குழு ஒன்று இப்போது பரிந்துரை செய்திருக்கிறது! காரணம், விவசாயிகளும் தொழில்துறையினரும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள்! இவர்கள் குறிப்பிடும் தொழில்துறை எது என்று எல்லாருக்கும் தெரியும். சிகரெட் உற்பத்தித் தொழில் இந்தியாவில் பிரதானமாக இரண்டு நிறுவனங்களின் கையில்தான் இருக்கிறது. சிகரெட் சந்தையில் 78.5 சதவிகிதம் ஐடிசி நிறுவனத்திடமும், 13.5 சதவிகிதம் காட்ஃபிரே பிலிப்ஸ் நிறுவனத்திடமும் இருக்கறது. சிகரெட் மீதான வரி ஆண்டுக்கு சராசரியாக 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் புகையிலையில் 11 சதவிகிதம்தான் சிகரெட் துறையில் பயன்படுகிறது. ஆனாலும் அதுவும் ஆட்சியாளர்களை ஆட்டிவைக்கும் செல்வாக்குள்ள சக்தியாகும்.

இங்கே புகைக்கக் கூடாது, அங்கே புகைக்கக் கூடாது, திரைப்படத்தில் புகைக்கும் காட்சி வரும்போது எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் உத்தரவிடுவதை விட புகையிலைப் பொருட்களின் உற்பத்தியை தடை செய்துவிடலாமே என்ற கேள்வி எழக்கூடும். அரசு புகையிலைப் பொருட்களை ஒருகாலத்திலும் தடை செய்யாது. ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரியாகக் கிடைக்கும் துறை அது. மட்டுமின்றி, புகையிலை ஒரு பணப்பயிர்; புகையிலை ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. அதனால் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருவாய் தனி. இதன் மூலம் வேலைவாய்ப்பும் உண்டு.  

அப்படியானால், அரசுக்கு மக்களின் உடல்நலத்தில் அக்கறை இல்லை என்று பொருளா? அப்படியல்ல. கடந்த இருபது ஆண்டுகளில் சிகரெட் மீதான வரி கொஞ்சம் கொஞ்சமாக – 1600%  வரை உயர்ந்திருக்கிறது. காரணம் என்ன? வரிகளை உயர்த்துவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல என்பதே சிகரெட் விஷயத்தில் உலகளாவிய கருத்து. அதாவது, அரசுக்கு வரியும் நிறையக் கிடைக்கும், விலை உயர்வால் வாங்க முடியாதவர்கள் புகைப்பதைக் குறைக்கவும் செய்வார்கள். இதுதான் சிகரெட் மீதான அதீத வரிவிதிப்பின் எதிர்பார்ப்பு.

ஆனால் உண்மையில் குறைக்கிறார்களா? அதுதான் இல்லை. சிகரெட் கம்பெனிகள் இந்த இடத்தில் ஒரு தந்திரத்தைக் கையாள்கின்றன. சிகரெட் மீதான வரி என்பது ஆறு அடுக்குகளில் உள்ளது. ஃபில்டர் உள்ளதா-இல்லாததா, சிகரெட்டின் நீளம் எத்தனை மிமீ என்பதைப் பொறுத்து வரி அமையும். பட்ஜெட்டில் வரி உயரும்போது, சிகரெட் நிறுவனங்கள் மேற்கண்ட ஆறு அடுக்குகளின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்கின்றன. உதாரணமாக, எனக்குப் பிடித்ததாக இருந்த கோல்ட் ஃபிளேக் சிகரெட்டின் நீளம் 65 மிமீ இருந்தது என்று வைத்துக் கொள்வோம். 65 மிமீ ஃபில்டர் வகை சிகரெட்டுக்கான வரியை அரசு உயர்த்தினால், விற்பனை விலை உயரும், வாடிக்கையாளர்கள் வாங்கத் தயங்குவார்கள், வாங்கும் சிகரெட் எண்ணிக்கையைக் குறைப்பார்கள் அல்லது மலிவான வேறு பிராண்டுக்கு மாறுவார்கள். இதைத் தவிர்க்க என்ன வழி? கோல்ட் ஃபிளேக் சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் அதன் நீளத்தை 1 மிமீ குறைத்து, 64 மிமீ ஆக்கி விடுகிறது. 64 செமீ நீளமுள்ள வகைக்கு வரி குறைவாக இருக்கலாம். எனவே, அதே பிராண்டை விலை மாறாமல் பழைய விலைக்கே விற்கலாம், அல்லது மிகக் குறைந்த விலையேற்றம் இருக்கும். வாங்குபவருக்கு இந்த வேறுபாடு பெரிதாகத் தெரியப் போவதில்லை. எனவே வாடிக்கையாளர் வேறு பிராண்டுக்கு மாறாமல், அதே பிராண்டுக்கு அடிமையாக இருப்பார். (2015இல் ஐடிசி நிறுவனம், பிரிஸ்டல் சிகரெட்டுக்கு இதே வழியைப் பயன்படுத்தி 5 மிமீ நீளத்தைக் குறைத்தது.) உற்பத்தி-விற்பனை என எதிலும் பாதிப்பு ஏதும் இருக்காது.

கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் இருக்கிறது. சிகரெட்டைவிட பல மடங்கு தீங்கு தருவது பீடிதான். பீடியில் பதப்படுத்தாத புகையிலை. சிகரெட்டில் செய்வதுபோல அடர்த்தியாக நிரப்பப் படுவதில்லை, ஃபில்டர் இல்லை. எனவே, வலுவாக இழுக்க வேண்டியிருக்கிறது. எனவே, நுரையீரல் நோய்கள் உள்பட பலவிதமான நோய்கள் தாக்கும் ஆபத்து சிகரெட் பிடிப்பவர்களைவிட பீடி புகைப்போருக்கு அதிகம். ஆனால் பீடிக்கு வரி மிக மிகக் குறைவு. கையால் தயாரிக்கப்படும் பீடித் தொழிற்சாலை, ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் குறைவான பீடி தயாரிக்கும் என்றால் அதற்கு கலால் வரி கிடையாது. இயந்திரத்தால் தயாரிக்கப்படும் பீடிக்கு மட்டுமே வரி. அதுவும் ஒரு பீடிக்கு 1.6 முதல் 2.8 பைசா வரைதான். இந்திய பீடிகளில் 98 சதவிகிதம் கையால் தயாரிக்கப்படுபவை. எனவே, பீடியினால் அரசுக்கு வருவாய் கிடையாது. அப்படியே வரி இருந்தாலும் அது மிகக் குறைவு. 2005-06இல் சிகரெட்டுக்கு கலால் வரி, கிலோவுக்கு 953 ரூபாய்; இதுவே 2015-16இல் 2773 ரூபாய். ஆனால், 2005-06இல் சிகரெட் அல்லாத பொருட்களுக்கு கலால் வரி கிலோவுக்கு வெறும் 33 ரூபாய், 2015-16இல் 52 ரூபாய் – இரண்டு மடங்கு உயர்வு இல்லை. (இப்போது அறிமுகமாகும் ஜிஎஸ்டி வரியினால் சிகரெட், பீடி இரண்டுக்கும் வரி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.)

சிகரெட்டுக்கு மட்டும் 1600% வரி அதிகரிப்பு, பீடிக்கு 50% கூட அதிகரிக்காத காரணம் என்ன? பீடி புகைப்பவர்கள் ஏழைகள், பீடித் தொழிலில் இருப்பவர்கள் ஏழைகள். பீடிக்கு வரி விதித்து, அதன் விற்பனை குறையுமானால் பீடித் தொழிலில் வேலை வாய்ப்பு குறையும், வருவாயும் குறையும். நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 1% வேலைவாய்ப்பை பீடித் தொழில் வழங்குகிறது. பீடி சுற்றும் தொழில்தான் இருக்கிற தொழில்களிலேயே மிகக் குறைந்த ஊதியம் தரும் துறையாகும். சராசரியாக 1000 பீடிக்கு 90 அல்லது 100 ரூபாய்தான் கூலி. இந்தத் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை – வருவாயை சிதைக்கும் நடவடிக்கை எடுக்க அரசுகள் தயங்குகின்றன. ஒருபக்கம் இது தீங்கு தரும் என்று தெரிந்தாலும், மறுபக்கம் அந்தத் தீங்கு தரும் தொழில் சிலருக்கு வாழ்வளிக்கிறது என்பது ஒரு முரண்தான். இருப்பினும், பீடி மீதான வரியையும் உயர்த்த வேண்டும், அதிலும் படத்துடன் கூடிய எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. குட்கா, பான் பராக் போன்ற இதர புகையிலைப் பொருட்களில் படத்துடன்கூடிய எச்சரிக்கை இடம்பெற்றாலும் பீடிக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. 

மேலே குறிப்பிட்ட வேலைவாய்ப்பு, ஏழைகளின் வருவாய் ஆகிய காரணங்களுக்காக பீடியில் மட்டும் எச்சரிக்கைப் படங்கள் தேவையில்லை என்று கருதுகிறது அரசு. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, சிகரெட் பெட்டியின்மீது 40% இருந்த எச்சரிக்கைப் படத்தை 85% படமாக மாற்ற வேண்டும் என்று கூறிய அதே ஆலோசனைக்குழு, பீடியின்மீது எச்சரிக்கைப் படம் தேவையில்லை என்று கூறியதும் கவனிக்கத்தக்கது. மற்றொரு பக்கம், சிகரெட் பெட்டியின்மீதும் எச்சரிக்கைப் படத்தின் அளவைக் கூட்டக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள் கடைக்காரர்கள்!



இவ்வளவு கதைகளையும் எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒருபக்கம் அரசு தன் வருவாய்க்காக சிகரெட் மீது வரிமேல் வரி விதித்து, விலை உயர்த்தி, எட்டாப் பண்டமாக ஆக்குவதன் மூலம் சிகரெட் புகைப்பவர்களைக் குறைக்க நினைக்கிறது. மற்றொரு பக்கம் ஏழைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தைக் காட்டி, பீடியின்மீது மிகக் குறைந்த வரி விதித்து, புகைப்பவர்களை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. புகைப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் தீங்கு விளைவது ஒருபக்கம் இருக்க, எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத பீடி சுருட்டும் தொழிலாளிகளின் ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கிறது. குறிப்பாக, இத்துறையில் ஈடுபடுவரோ் பெண்களும் குழந்தைகளும். 

ஆக, புகைத்தல் உடல் நலத்துக்குத் தீங்கு என்று எச்சரிக்கும் வேலையை மட்டுமே அரசு செய்யும். புகையிலைப் பழக்கத்தை நிறுத்த உளவியல் ஆலோசனைச் சேவைகளை அரசுகள் வழங்குமானால் பெருத்த மாற்றம் நிகழக்கூடும். ஆனால், சுகாதாரம், மருத்துவம் ஆகிய அத்தியாவசியத் துறைகளைக்கூட படிப்படியாக கைகழுவி வரும் அரசுகள் இதைச் செய்யாது. இலவச மருத்துவத் துறைகளை சீரழித்து, எல்லாரையும் தனியாரின் பக்கம் தள்ளிவிடுகின்றன. புகைப் பழக்கத்தால் வரும் நோய்கள் மன உளைச்சல் தருபவை மட்டுமல்ல, மிகுந்த செலவு பிடிக்கக்கூடியவை. நடுத்தர, ஏழை மக்கள் லட்சக் கணக்கில் பணத்தைக்கொட்டி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது சாத்தியமில்லை. (புகையிலையால் வரும் நோய்களுக்கு மட்டும் மக்கள் செலவு செய்யும் தொகை ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி! )

புகைப்பதை நிறுத்துவது அரசின் செயல்பாட்டினால் சாத்தியம் இல்லை. புகைப்பழக்கத்துக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதிகபட்சமாக, நீங்கள் புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாமே தவிர, முற்றிலுமாக விட்டொழிக்கச் செய்யாது. புகைப்பதை எப்படி நிறுத்தலாம் என்று அரசு உங்களுக்கு ஆலோசனை தரப்போவதில்லை. புகைப் பழக்கத்துக்கு எதிரான ஆலோசனை தரும் சேவையில் தன்னார்வ நிறுவனங்களும் இந்தியாவில் இல்லை. புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது நம்முடைய முடிவைப் பொறுத்து மட்டுமே இருக்கிறது. இதை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள். அடுத்த பதிவில் புகைப்பதை நிறுத்த வழிகாட்டும் ஆலோசனைகளைப் பார்ப்போம்.


No comments:

Post a Comment