Saturday 13 May 2017

டிப்ஸ்

டிப்ஸ் 1 : நல்லா தண்ணியடிங்க.

எங்க வீடு கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கு. வெயில் படாமல் உள்ளடங்கி இருக்கும். அதனால், பொதுவா வெப்பம் தெரியாது. ஏ.சி. போட்ட மாதிரின்னு இல்லாட்டியும் குளுகுளுன்னுதான் இருக்கும்.

கீழே ஒரு படம் இருக்கு பாருங்க. என்னன்னு தெரியுதா? காஞ்சு போன குச்சி மாதிரி இருக்கு இல்லையா?



இப்போ இந்தப்படத்தைப் பாருங்க.


என் வீட்டில் என் கம்ப்யூட்டர் டேபிள் மேல் வச்சிருந்து இந்தப் படங்களை எடுத்தேன். இந்த வெள்ளரிப் பிஞ்சுதான் மேலே குச்சி மாதிரி காஞ்சு போயிருக்கிறது.  வெள்ளரிப்பிஞ்சு படம் 1ஆம் தேதி காலையில் எடுத்தது. குச்சி மாதிரி காஞ்சு கிடக்கே, அது 6ஆம் தேதி மாலையில் எடுத்தது.

வெயிலே படாத, குளிர்ச்சியா இருக்கிற இடத்திலேயே அவ்வளவு தண்ணியும் காஞ்சு, குச்சியாப் போச்சுன்னா, வெயிலில் சுத்துனா என்னாகும்? வடக்கே ஒவ்வொரு வருசமும் ஹீட் ஸ்டிரோக்கில் பல நூறு பேர் பலியாகிறாங்க.

வெளியே போகும்போது கையில் எப்பவும் தண்ணி எடுத்துட்டுப்போங்க. இதுக்கு வெக்கப்படத் தேவையில்லை. கையில் தண்ணி பாட்டில் எடுத்துட்டுப் போறதை ஏதோ கேவலமான விஷயமா பலரும் நினைக்கிறாங்க.

பொதுவா தாகம் எடுத்தா தண்ணி குடிப்போம். வெயில் காலத்தில் அப்படியிருக்கக் கூடாது. தாகம் எடுக்காட்டியும் தண்ணி குடிச்சுட்டே இருக்கணும்.

வெயிலில் அதிகம் சுத்துனா, வீட்டுக்கு வந்தப்புறம் நீர்க்கடுப்பு புடிக்கும். அதைத் தவிர்க்கிறதுக்கு ஒரே வழி, நிறைய தண்ணீர் குடிக்கிறதுதான்.

 * * *
டிப்ஸ் 2 : ஏமாறாதீர்

பக்கத்துல இருக்கிற மளிகைக்கடையில, ரோட்டோர காய்கறிக் கடையில, தள்ளுவண்டியில எல்லாம் காய்கறி வாங்கறதுல இன்றைய புதுவகை இளைய சமூகத்துக்கு விருப்பமில்லை.

மாலுக்கு அல்லது பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் போகணும். பொதியுருளி (டிராலி-பேஸ்கட்) உருட்டிட்டுப்போய் - தேவைப்படற பொருட்கள்னு இல்லாம - கண்ணுல படற பொருட்களை அள்ளிட்டு கார்டு ஸ்வைப் பண்ணிட்டு வரணும். அதுதான் இப்பல்லாம் ரீஜன்ட்டு.

அப்படித்தான் போறாங்களே..., அரிசி பருப்பு சர்க்கரை மாதிரியான அழுகிப்போகாத பொருட்கள் மட்டும் வாங்கிட்டு வந்தா ஆகாதா...? முட்டை, ஆப்பிள் எல்லாம்கூட அங்கதான் வாங்கறது.

பேப்பர் கூழில் செய்த ஒரு டிரேல முட்டைகளை வச்சு, பாலிதீன் மூடி போட்டு ஒட்டி வச்சிருக்கு. எட்டு முட்டை 70 ரூபாய். அதே 8 முட்டைகள் மளிகைக் கடையில் 40 ரூபாய். எதுக்கு 70 ரூபாய் கொடுத்து வாங்கணும்னு கேட்டா, நாட்டுக்கோழி முட்டையாம்...! இத்தனை நாட்டுக்கோழி முட்டைகள் உற்பத்தி செய்யணும்னா நாட்டுக்கோழிப் பண்ணைகள்னு தனியா இருக்கோணும். முட்டை ஓடு வெள்ளையா இருக்கிறதுக்கு பதிலா லேசா பிரவுன் கலரா இருக்கு. இதுமாதிரி சாதாரண முட்டைகளிலும் ஒண்ணு ரெண்டு கலந்து இருக்கும், நீங்க பாத்திருப்பீங்க. அதையே தனியா பேக் செஞ்சு இரண்டு மடங்கு விலை வைக்கிறானுக.  அதுதான் தொலையட்டும்.

ஆப்பிள். தள்ளுவண்டியிலோ பழக்கடையிலோ ஆப்பிள் வாங்கலாம். அதைவிட்டுப்போட்டு பேக்கிங் செஞ்ச ஆப்பிள் வாங்கிட்டு வர்றது. பொதுவா பழக்கடையில் ஆப்பிள் வாங்கிட்டு வந்து பிரிஜ்ல வச்சா ஒரு வாரம் பத்து நாள் இல்லே, மாசமானாலும் அப்படியே இருக்கும்.

இதா... படத்தைப் பாருங்க. அழுகிப்போன சப்போட்டா மாதிரி இருக்கே... இது ஆப்பிள்.

நம்ப முடியலே இல்லையா? என்னாலயும் நம்ப முடியாம, பாக்கெட் பாத்தேன்... ADANI FARM-PIK அப்படீன்னு ஒரு பிராண்ட். ஆமா... அதே அதானிதான். வாங்கிட்டு வந்து பிரிஜ்ல வச்சிருந்தது. 10 நாள் இருக்கலாம். வெளியே எடுத்தப்போ இந்த நிலைமை.


எப்போ ஆப்பிள் தோட்டத்தில் கொள்முதல் செஞ்சதோ...? எத்தனை நாள் லாரியிலும் குடோனிலும் கிடந்ததோ? எத்தனை மாதங்கள் கோல்ட் ஸ்டோரேஜ்ல கிடந்ததோ...? எப்போ பேக்கெட் போட்டாங்களோ...? எத்தனை நாள் ஹோல்சேல் கடையில் கிடந்ததோ? எப்போ அந்தக் கடைக்கு வந்துச்சோ... ?!?!

பழக்கடையில் ஆறு ஆப்பிள் வெறும் 40-50 ரூபாய்க்குக் கிடைச்சிருக்கும். இது? 145 ரூபாய்!!!

கொள்ளையில போகட்டும்.

இது அதானிக்கு எதிரான போஸ்ட் இல்லை. அழகான பேக்கிங் பாத்து இது மாதிரி நீங்களும் ஏமாந்து போய் வாங்காதீங்கன்னு சொல்லத்தான் எழுதியிருக்கேன்.


Friday 12 May 2017

ஹைடிரோகார்பன் - யார் பொறுப்பு

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?
ஹைட்ரோகார்பன் என்பது கரிம வேதிப்பொருள்களின் கலவை, அதாவது, ரசாயனப் பொருள். இதில் ஹைட்ரஜனும் கார்பனும் இருக்கும்.

ஹைட்ரோகார்பன் என்பது இயற்கையாக்க் கிடைப்பதா, செயற்கைப் பொருளா?
இரண்டும் உண்டு. இயற்கையாகக் கிடைப்பதில் முக்கியமானது நிலத்திலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலியத்தின் மூலப் பொருளான கச்சா எண்ணெய். மற்றபடி, கார்பனையும் ஹைட்ரஜனையும் விகிதப்படி கலந்து யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால், ஹைட்ரோகார்பன் என்று இங்கே பேசப்படுவது நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள்தான்.

ஹைட்ரோகார்பன் பொருட்களுக்கு உதாரணம் ?
மீத்தேன், புரொபேன் போன்ற வாயுக்கள், பென்சீன் போன்ற திரவங்கள், மெழுகு போன்ற திடப்பொருட்கள்,

அப்படியானால் மீத்தேன் திட்டமும் ஹைட்ரோகார்பன் திட்டமும் ஒன்றுதானா?
மீத்தேன் திட்டம் என்று சொன்னால் எதிர்ப்பு வருகிறது என்பதால் ஹைட்ரோகார்பன் என்று சொல்லியிருக்க வாய்ப்பு உண்டு. மீத்தேன் திட்டம் என்றால் மீத்தேன் என்று மட்டுமே பொருள்படும். ஹைட்ரோகார்பன் என்றால், மீத்தேன் உள்பட பலவும் அடங்கும்.

நாடு முன்னேற வேண்டாமா? வளர்ச்சி வேண்டாமா? வளர்ச்சி வேண்டியிருக்கிறது. அது இல்லையேல் மின்சாரம் உள்பட எந்த வசதியும் அனுபவிக்க முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு அதை எதிர்க்கலாமா?
வளர்ச்சி வேண்டும்தான். அதற்காக அதன் பின்விளைவுகளைப் பற்றி யாரும் பேசவே கூடாதா என்ன? பசுமைப் புரட்சி வந்தபோது அன்றைக்கு அது உன்னதமான திட்டம். மண்வளத்தை எல்லாம் சீரழித்து விட்டதென இன்று அது விமர்சிக்கப்படவில்லையா? வளர்ச்சி என்ற பெயரால் நீராதாரப் பகுதிகளை எல்லாம் ஆக்கிரமித்ததன் விளைவை 2015 டிசம்பரில் சென்னையில் நாம் பார்க்கவில்லையா?

அறிவியல் தெரிந்தவர்கள் பேச வேண்டிய விஷயம் அல்லவா இது?
கேட்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை என்றால் வாயை அடைப்பதற்கான எளிய வழி இது. கூடங்குளம் விவகாரத்தின்போதும் இதேதான் சொன்னார்கள். விந்தை என்னவென்றால், அறிவியல் தெரிந்தவர்கள் அடுக்கடுக்காக பொய்களை அவிழ்த்து விட்டார்கள்! அறிவியல் அறிந்தவர்கள் எல்லாரும் உண்மையே பேசுவார்கள், நேர்மையானவர்கள் என்று பொருளாகுமா என்ன?

ஹைடிரோகார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு வரும்?
இதுவரை வாசித்த கட்டுரைகள், தேடிப்படித்த தகவல்கள், இந்திய நில அமைப்பு ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் இந்தத் திட்டம் சாதகங்களைவிட அதிக பாதகங்களையே கொண்டுவரும் என்று தோன்றுகிறது.

ஏன் என்றால், தமிழகத்துக்கு இப்போதே கடுமையான தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள். மேற்குத் தொடர்ச்சி மலை மொட்டை அடிக்கப்பட்டு, மழை குறைந்து விட்டது. நீராதாரங்களை பராமரிக்கும் பழக்கத்தை மறந்து விட்டோம். தமிழகத்துக்கென சொந்தமாக உற்பத்தியாகும் நதிகள் இல்லை. கேரளமும் கர்நாடகமும் அணைக்கு மேல் அணையாக கட்டிக் கொண்டே இருக்கின்றன. நிலத்தடி நீர்வளம் சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது சூரிய மின்சக்தி பரவலாகிக் கொண்டிருப்பதால் வேளாண்மைக்காக நிலத்தடி நீர்வளம் இன்னும் சுரண்டப்படும். இத்தனை பிரச்சினைகளுக்கும் மேலாக, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் நீர் நிறையவே தேவை.

இத்தகைய பின்புலத்தில், ஒவ்வொரு இடமாக கிணறு தோண்டி, பல்வேறு இடங்களிலிருந்தும் சுரண்டி எடுத்த நிலத்தடி நீரை இரசாயனங்களுடன் உள்ளே செலுத்தி, அந்தப் பகுதியின் நிலத்தடி நீரை மாசுபடுத்தி, இருக்கிற வளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அப்படியே விட்டு விட்டு அடுத்த இடத்தை நோக்கிச் செல்கிற திட்டம் இது. இதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எந்தளவுக்கு இருக்கும் என்பதை எந்த விஞ்ஞானியும் / அதிகாரிகளும் சொல்லிவிட மாட்டார்கள்! கர்நாடக ரெட்டிகள் மலைகளை சுரண்டி மொட்டை அடித்த கதைகளை நாம் பார்க்கவில்லையா என்ன? சுற்றுச்சூழல் அனுமதிகளும், அவ்வப்போதைய மதிப்பீடுகளும், என்ன சாதித்தன? அப்போதெல்லாம் செய்யாததை இப்போது மட்டும் செய்து விடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

• இந்தத் திட்டம் வேண்டாம் என்பவர்கள் காரோ பைக்கோ வேண்டாம் என்று சொல்லிவிட்டு நடந்து போவார்களா? சமையல் கேஸ் வேண்டாம் என்று மறுத்துவிட்டு விறகு அடுப்புக்குப் போவார்களா?
இந்தமாதிரி கேள்வி கேட்பவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோலைக் குடிப்பார்களா? காற்றுக்குப் பதிலாக எரிவாயுவை சுவாசிப்பார்களா? என்று திருப்பிக் கேட்கலாம்தானே?

முந்தைய காங்கிரஸ் அரசும், தமிழ்நாட்டில் திமுக அரசும்தானே இத்திட்டம் கொண்டுவரக் காரணம்? பாஜக அரசை எதற்கு குற்றம் சொல்ல வேண்டும்.
கீழே கொடுத்திருக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
///கேள்வி=இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்ப தொடங்கினாங்க?
பதில்= *1996ல்*
கேள்வி = அப்ப யார் அங்க எம்எல்ஏவா இருந்தா
பதில்= *ராஜசேகர்*
கேள்வி = அவர் எந்தகட்சி?
பதில் = கம்யூனிஸ்ட் கட்சி.
கேள்வி = அந்தத் தொகுதி எம்பியா இருந்தது யாரு?
பதில்=ப.சிதம்பரம்
கேள்வி =அவர் எந்த கட்சி?
பதில் = *காங்கிரஸ்*
கேள்வி = இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி யாரு?
பதில்= *ஆ.ராசா*
கேள்வி = அவர் எந்த கட்சி?
பதில்= *தி.மு.க*
கேள்வி = அப்ப ஏன் தேவையில்லாமல் இப்போதைய பிரதமர் மோடிய தப்பா பேசுறீங்க.???
பதில்= அதான்பா இன்றைய லேட்டஸ்ட் அரசியல்...//

திட்டம் தொடங்கியது 1996 இல்லை. In order to harness CBM potential in the country, the Government of India formulated CBM policy in 1997. கொள்கை அளவில் முடிவெடுத்ததே 97இல்தான். அதற்குப் பிறகு எங்கெங்கே ஹைடிரோகார்பன் இருக்கக்கூடும் என்ற பரிசோதனைகள் தொடங்கின. இதில் இருக்கிற எல்லா தகவலும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். 1990களில் ஃப்ராக்கிங் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. ஏதோ டிரில் போடுவார்கள், எண்ணெய் வரும், பம்ப் மூலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த அளவுக்குத்தான் புரிதல் இருந்திருக்கும்.

சுற்றுச்சூழல் என்கிற விஷயமே எப்போதிருந்து பரவலாக பேசப்படுகிறது? 20-30 ஆண்டுகளாகத்தானே? அப்போது தவறு என்றாலும் தெரியாத ஒரு விஷயம், இப்போது தெரிய வரும்போது கைவிட வேண்டியதுதானே? ஜப்பானில் ஃபுகுஷிமா விபத்துக்கு முன்னால் அணுஉலையை ஆதரித்தோம் என்பதற்காக இப்போதும் ஆதரிக்க முடியுமா?

எத்தனை காலத்துக்கு காங்கிரசையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். அப்படியே காங்கிரஸ் செய்திருந்தால், அது தவறு என்றால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் திட்டத்தைக் கைவிட வேண்டாமோ?

அதுவும் போகட்டும். முக்கியமான விஷயம் இங்கே இருக்கிறது.
On 02nd Sep 2015 Government has approved the Discovered Small Field policy with a prime objective to bring Discovered Small Fields to production at the earliest so as to increase the domestic production. The Discovered Small Field policy provides for single uniform license for producing all kinds of hydrocarbon, no cess on the oil production, moderate royalty structure, customs duty exemptions and complete marketing and pricing freedom for the sale of produced crude oil and natural gas. These small fields have been discovered by National Oil Companies i.e. Oil & Natural Gas Corporation Ltd (ONGC) and Oil India Ltd (OIL) and are envisaged to be put on production through expeditious efforts.
Under the policy, Government of India is offering 46 Contract Areas with 67 oil and gas fields, estimated to hold over 625 Million Barrels of Oil and Oil Equivalent Gas (O+OEG) in-place, spread over 1,500 square kilometres in Onland, Shallow water and Deepwater areas.


அதாவது, 2015 செப்டம்பர் 2ஆம் தேதிதான் அரசு ஸ்மால் ஃபீல்ட் பாலிசிக்கு அங்கீகாரம் அளிக்கிறது. நெடுவாசல் அந்தத் திட்டத்தின்கீழ்தான் வருகிறது.

2015இல் ஆட்சியில் இருப்பது மோடியா காங்கிரசாஅதற்கும் மேலே, இந்தக் கொள்கையின் அடிநாதம்
single uniform license
no cess on the oil production
moderate royalty structure
customs duty exemptions
complete marketing and pricing freedom for the sale
அதாவது, ஹைடிரோகார்பன் திட்டத்தால் நிலங்களை அழித்து வளங்களை சுரண்டுவோருக்கு சலுகை மேல் சலுகைகள்!

• உலகத்தின் எத்தனையோ நாடுகளில் இத்திட்டம் செயல்படவில்லையா?
இது திரிக்கப்பட்ட உண்மை. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஹைடிராலிக் ஃப்ராக்கிங் என்னும் தொழில்நுட்பம் பயன்படுகிறது. பல நாடுகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை படிப்படியாக கைவிட்டு வருகிறார்கள். ஃப்ராக்கிங் செய்வதற்கு தடை விதித்துள்ள நாடுகள்
ஆஸ்திரேலியா - 2016 செப்டம்பர் முதல் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது.
பல்கேரியா - 2011 ஷேல் கேஸ் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் 2012இல் தடை செய்யப்பட்டது.
கனடா - பல காலமாக பரவலாக பயன்படுத்தப்பட்டது. 2011 முதல் மறுபரிசீலனை துவங்கியது. பல பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டது.
பிரான்ஸ் - மக்கள் எதிர்ப்பால் 2011 முதல் தடை செய்யப்பட்டது.
ஜெர்மனி - பல ஆண்டுகளாக பரவலாக பயன்படுத்தப்பட்டது. 2016 முதல் முற்றிலுமாக தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
நெதர்லாந்து - 2013இல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு தொடர்கிறது.
நியூசிலாந்து - மிகச்சிறிய அளவில் நடைபெறுகிறது. அதற்கும் எதிர்ப்பு துவங்கி விட்டது.
போலந்து - பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. மக்கள் தொகை நெருக்கமும், விவசாய நாடாகவும் இருப்பதால், கவலை அதிகரித்து வருகிறது.
ருமேனியா - மக்கள் போராட்டம் தொடர்கிறது.
தென் ஆப்பிரிக்கா - புதிதாக துவக்கும் திட்டம் எதிர்ப்புகளை சந்தித்து, 2011இல் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஷெல், ஃபால்கன் உள்ளிட்ட நிறுவனங்களின் காரணமாக, மக்களுக்கு முழு விவரமும் தெரிவிக்கப்படாமல், தடை விலக்கப்பட்டது.
டுனிசியா - 2014இல் தடை விதிக்கப்பட்டது.
உக்ரைன் - உலகிலேயே அதிகமான ஷேல் கேஸ் உள்ள நாடுகளில் 3ஆவது இடம். ஆனால் நாட்டின் அரசியல் நிலவரம், புவியரசியல் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்கள் முன்னேறவில்லை.
யு.கே. - பரவலாக பயன்பாட்டில் உள்ளது. எல்லாமே கடல் பகுதியில் என்பதால், நிலப்பகுதியில் துவங்கியபிறகு மக்கள் கவனம் திரும்பியது. 2011இல் நிலநடுக்கம் காரணமாக தற்காலிக தடை செய்யப்பட்டது. கிணறுகளுக்குள் செலுத்தும் ரசாயனங்கள் ஆபத்தற்றவையாக மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது..
ஸ்காட்லாந்து - புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என முடிவு செய்யப்பட்டு விட்டது.
யுஎஸ் - 2012இல் வெர்மான்ட் மாகாணம்தான் முதன்முதலில் தடை செய்தது. அதிக ஷேல் கேஸ் இருப்பதாக கருத்தப்படும் நியூ யார்க் 2014இல் தடை செய்தது. மேரிலேண்டும் தடை செய்துவிட்டு, புதிய விதிகள் உருவாக்கப்பட்ட பிறகு தடை விலக்கப்படும் என அறவித்துள்ளது. கலிபோர்னியாவின் மான்டரி கவுன்டியில் 2016 நவம்பரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அலமேடாவில் 2016 ஜூலையில் தடை. ஆக மொத்தம், கலிபோர்னியாவின் 6 கவுன்டிகளில் தடை விதிக்கப்பட்டு விட்டது. டெக்சாஸ், சான்டா க்ரூஸ், பென்சில்வேனியா என பல பகுதிகளிலும் தடை.


நெடுவாசல் உள்ளிட்ட தலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மைய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. அதைத் தடுப்பதற்கான நிர்ப்பந்தம் இனி தமிழக அரசுதான் செய்ய வேண்டும். தமிழக அரசை நிர்ப்பந்தம் செய்வதன் மூலம்தான் இதைச் செய்ய முடியும்.

Monday 8 May 2017

பெயரில் என்ன இருக்கிறது? எவ்வளவோ!

குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். நல்ல பெயராக நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்பார்கள். சிலர், குறிப்பிட்ட எழுத்தில் துவங்குகிற பெயரைப் பரிந்துரைக்குமாறு சொல்வார்கள். சிலர், இன்ன பெயர் வைக்கலாம் என்று விரும்புகிறேன், கருத்துக் கூறுங்கள் என்று கேட்பார்கள். இதைப்பற்றி யோசிக்கும்போது பல விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாதான் என்பது ஷேக்ஸ்பியரின் வாதம். ஆனால் பெயரில் எவ்வளவோ இருக்கிறது என்பது சாதியக் கட்டுமானம் கொண்ட நமது சமூகத்தில் எதார்த்தம்.



அன்றைய சில விஷயங்களை இப்போது யோசித்தால் வியப்பாக இருக்கிறது. நான் வளர்ந்த மடத்துக்குளத்தில், எங்கள் வீட்டுக்கு மேற்கே இருந்த பகுதி கொடிக்காத் தெரு என்று அழைக்கப்பட்டது. வெற்றிலைக் கொடிக்கால் போடும் தொழிலில் ஈடுபட்டிருந்த பாண்டிய வேளாளர் சமூகத்தினர் வசித்த பகுதி. அவர்களில் பலருக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள் இருக்கும். அங்கே வசித்துவந்த - அண்ணா என்று எங்களால் அழைக்கப்பட்ட அண்ணாதுரைக்கு - தம்பி பிறந்தபோது, ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தவன் என்பதால், என் அக்காக்கள்தான் அவனுக்கு சுதந்திர ராஜ்என்று பெயர் வைத்தார்கள்.

எனக்கு ஷாஜஹான் என்று பெயர் வைத்த கதை இன்னும் சுவையானது.

நான் பிறந்தபோது, எங்கள் ஊரில் இருந்த ஒருவர் எனக்கு ஜாதகம் எழுதி வைத்தார். முஸ்லிம்களில் ஜாதகம் எழுதும் வழக்கம் இல்லை, இது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால் அவரோ, ஜாதகம் எழுதுவது தவறில்லை என்பதற்கு பல விளக்கங்களை அரபியிலும் தமிழிலும் முதலில் எழுதி விட்டுத்தான் என் ஜாதகத்தையே எழுதியிருக்கிறார். நானோ என் குடும்பத்தினரோ அந்த ஜாதகத்தை நம்பவில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் அது நொறுங்கிப்போகும் தாள்களாய் இப்போதும் என் கைவசம் இருக்கிறது. அந்த ஜாதகத்தின்படி என் பெயர் - சையத் பத்ருத்தீன். பிறகு ஷர்ஃபுதீன் என மாற்ற யோசித்தார்கள். பத்ருத்தீன் எப்படி ஷாஜஹான் ஆனான் என்பது சுவையான கதை. நீங்கள் வேறு யார் வாழ்க்கையிலும் கேள்விப்படாத கதையாக இருக்கலாம்.



அப்பா ஆசிரியராக இருந்தார். அதிகமாகவே மதிக்கப்பட்ட, அதற்குத் தகுதியும் கொண்ட ஆசிரியராக இருந்தார். அவரிடம் ஏராளமான மாணவர்கள் தனிக்கல்வி பெற வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் எல்லாருமே இந்துக்கள். எங்கள் குடும்பத்தில் ஜாதி-மத வேறுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என்பதை என் எழுத்திலிருந்தே நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அப்படி வீட்டுக்குக் கல்வி பயில வந்த மாணவர்களுக்கு சையத் ஷர்ஃபுதீன் என்ற பெயர் உச்சரிக்கக் கடினமாக இருந்ததாம். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் ஷாஜஹான் என்ற பெயர் இடம் பெற்றே தீரும். ஜாஜகான், ஜார்ஜஹான், சாசகான், சாசஹான், ஸாஜகான், சார்ஜகான், சாஜஹான், ஷாஹே ஜஹான் என எப்படி தப்பாக உச்சரித்தாலும் ஷாஜஹான் அவர்களுக்கெல்லாம் தெரிந்த பெயர்தானே... ஆகவே அவர்கள் ஷாஜஹான் என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். கடைசியில் பெற்றோரும் பள்ளியில் சேர்க்கும்போது ஷாஜஹான் என்றே பதிவுசெய்து விட்டார்கள்.

இன்று...? எனக்குத் தெரிந்த ஈரோட்டுக் கவுண்டர்கள் குடும்பத்தில் ஷிவானி, தர்ஷன் என்று பெயர்கள். தில்லியில் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருக்கிற சமூகத்தின் ஒரு தமிழ்க் குடும்பத்தில் இரண்டு பெண்கள் - சோனியா, மோனியா. இதுபோல இன்னும் பல விந்தையான பெயர்களையும் பார்க்கலாம்.

இந்த மாற்றம் எங்கிருந்து வந்தது. இதுபோன்ற பெயர்கள்தான் மாடர்ன் என்ற கருத்து நமக்குள் எப்படி நுழைகிறது. தொலைக்காட்சி உபயம். பொருளாதார நிலையில் நம்மைவிட மேலே இருக்கிறவர்களை - நவீனமானவர்கள் என்று கருதுகிறவர்களை - எட்ட முடியவில்லை என்றாலும், இப்படிப் பெயர் வைப்பதிலாவது நாமும் நவீனமடையலாம் என்று நினைக்கிறோம். கிராமப்புறங்களில் தலித் என்பதற்காப் புறக்கணிக்கப்படும் சமூகத்தினர் நவீனப் பெயர்களை சூட்டிக்கொள்ளும்போது, அவர்கள் நகரங்களுக்கு நகரும்போது தலித் என்ற அடையாளம் பெருமளவுக்கு மறைந்து போகிறது என்பது ஒரு சாதகம். மற்றபடி, பொதுவான வழக்கம் என்னவென்றால், நமக்குக் கிடைத்திராத வசதிகளை எல்லாம் நம் குழந்தைகளுக்குக் கொடுக்க நினைக்கிறோம். அதேபோல, நமக்குப் பிடித்த விஷயங்களை நம் குழந்தையில் திணிக்கவும் விரும்புகிறோம். பிள்ளை இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது கடைசிக்கட்டம். பெயர் வைப்பது முதல் கட்டம்.

20-30 ஆண்டுகள் முன்பு வரையில் குழந்தைக்குப் பெயர் வைப்பது என்பது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆணாக இருந்தால் தாத்தாவின் பெயர், பெண்ணாக இருந்தால் பாட்டியின் பெயர். இதுதான் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வழக்கமாக இருந்தது. பிற்பாடு, நட்சத்திரங்கள், கிரகம், ராசி, எண் கணிதம், ரசனைகள், மொழி ஆர்வம், எனப் பலவும் தாக்கம் செலுத்தத் துவங்கி விட்டன. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மூட நம்பிக்கைகளுக்கு தூபம்போட, வியாபாரிகள் கொழிக்க, பெயர் வைப்பதில் பல்வேறு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும் வழக்கம் துவங்கி விட்டது. இந்தக் குழந்தைக்கு இந்த எழுத்தில் துவங்கும் பெயர் வைக்க வேண்டும் என்பதான நம்பிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்குவதில் நான் இறங்க விரும்பவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு, நடப்புக்கு வருகிறேன்.

இன்று நாம் சூட்டுகிற, அழகாகத் தெரிகிற பெயர், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதையும் யோசித்துப் பெயர் வைப்பது நல்லது. அதற்காக, பொதுவில் வழக்கில் உள்ள பெயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்கள் சூட்டவிரும்பும் பெயரை பல விதமாக உச்சரித்துப் பாருங்கள், பிள்ளையின் சிறு வயதிலும், இள வயதிலும், கல்லூரிக் காலத்திலும் அந்தப் பெயர் எவ்வாறு உச்சரிக்கப்படும் என்று யோசித்துப் பாருங்கள். வழக்கத்துக்கு மாறாக இருக்கிற பெயரால் சக நண்பர்களால் கேலி செய்யப்படும் ஆபத்து இருக்கிறதா, அதன் காரணமாக பிள்ளை மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.

இது உலகமயமான உலகம். பிள்ளை தமிழ்நாட்டில் மட்டுமே வசிக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்தியாவின் பிற பகுதிகளிலோ, வெளி நாடுகளிலோ வசிக்க நேருமானால் நீங்கள் சூட்ட இருக்கும் பெயர் பிள்ளைக்கு வசதியாக இருக்குமா என்று யோசியுங்கள்.

நண்பர் ஒருவர் தன் மகனுக்கு யூரி ககாரின் என்று பெயர் வைத்திருக்கிறார். யூரி ககாரின் முதல் விண்வெளி வீரர், ரஷ்யர். எனவே, புகழ் பெற்றவர். அந்தப் பெயரை அனைவரும் அறிந்திருந்தால் பிரச்சினை இல்லை. பலருக்கும் தெரியாதபோது, பெயர் விந்தையாகத் தோன்றும். இன்னொரு நண்பர் தன் மகளுக்கு வியட்நாம் என்று பெயர் வைத்திருக்கிறார். வியட்நாமில் அமெரிக்கா தோல்வி கண்ட ஆண்டில் பிறந்தவர் என்பதால் அந்தப் பெயர். அவர் கம்யூனிஸ்ட் என்பதாலும், மகளும் கம்யூனிச சிந்தனையில் வளர்நதவர் என்பதாலும் பிரச்சினை ஏதுமில்லை. இன்னொரு பெயர் கேரளகுமாரி. பேஸ்புக்கில் நட்பில் இருக்கிறார். தோழர் நல்லகண்ணுவின் மைத்துனி. கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசு அமைந்த நேரத்தில் பிறந்தவர் என்பதால் அந்தப் பெயர். கம்யூனிஸ்ட் தந்தை - மருதன்வாழ்வு அ.க. அன்னச்சாமி என்பதால் அவருக்கு சங்கடம் ஏதுமில்லை. இப்படி சித்தாந்தப் பிடிப்புடன், அல்லது கட்சித் தலைவர் மீதான ஈர்ப்புடன் பெயர் வைத்தபிறகு, பிள்ளை வளரும்போது வேறு சித்தாந்தத்தில் ஈர்ப்புக் கொண்டு விட்டால், அது அவருக்கு தர்மசங்கடமாக இருக்கும். பெயர் சூட்டும்போது இதையும் கருத்தில் கொள்வது நல்லது.

முக்கியமாக ஒரு விஷயம். குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெரும்பாலும் ஆண்தான் முடிவு செய்கிறான். உண்மையில் குழந்தைக்காக அனைத்தையும் தாங்கி பெற்றுத் தருபவள் பெண்தான். ஆனால் பெயர் வைப்பதில் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை. கல்வியறிவு / வெளி உலகத் தொடர்பு இல்லாத, கிராமப்புற வாழ்க்கையாக இருந்த வரையில் இது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் இப்போது உலகம் சுருங்கி விட்டது. பெண்ணுக்கும் பல விவரங்கள் தெரியும், தன் பிள்ளையின் பெயரைப் பற்றி அவரும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கலாம். எனவே, அவருடனும் ஆலோசனை செய்யுங்கள். அவருடைய கருத்துக்கும் மதிப்பளித்து பெயர் சூட்டுங்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தால் பெற்றோருடனும் ஆலோசனை பெறலாம். குறைந்தபட்சம், அவர்களுடைய கருத்தையும் கேட்டறிந்து செய்ததுபோல நாடகமாவது ஆடுங்கள்.

Sunday 7 May 2017

கோடையும் குழந்தைகளும்

கோடை விடுமுறை வந்துவிட்டது. பெற்றோர் தம் குழந்தைகளை சகல கலா வல்லவர்களாக ஆக்குவதில் தீவிரமாகி விடுவார்கள். குழந்தைக்குப் பிடித்த கலை எது, அந்தக் கலை தேவையா என்ற அலசல்கள் ஏதுமில்லாமல், பக்கத்து வீட்டுக் குழந்தை போகிறது என்பதற்காகவே தன் குழந்தையும் கராத்தே கற்க வேண்டும், பரத நாட்டியம் கற்க வேண்டும், பாட்டுப் பாடக் கற்க வேண்டும்.... என பல கலைகளைத் திணிக்கிறார்கள். இப்படித்தான், விருப்பமில்லாத ஒரு குழந்தைக்கு பெற்றோர் நீச்சலைத் திணிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அதையொட்டிதான் இந்தப் பதிவு.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் இதெல்லாம் திணிப்பில் வராது. அவை வாழ்க்கைத் தேவைகள். ஒரு மொழியைக் கற்கிறீர்கள். தொடர்ந்து அந்த மொழியைப் பயன்படுத்தவில்லை என்றால் மறந்து போகும். (உருது எழுத/படிக்க எனக்கு அப்படித்தான் மறந்து போனது.) ஆனால் நீச்சலும் சைக்கிள் ஓட்டுவதும் ஒரு முறை பழகி விட்டால் ஆயுள் இருக்கிற வரையில் மறக்காதவை. (வேறேதாவது திறமைக்கு இப்படியொரு பெருமை இருக்கிறதா என்று தெரியவில்லை.) தட்டச்சும் பழகி விட்டால் மறக்காது. பல ஆண்டுகள் தொடர்பு அறுந்துபோனால், விரல்களின் பழக்கம் சற்றே விட்டுப்போகும், ஆனால் மறுபடி தட்டச்ச உட்காரும்போது தானாகவே விரல்கள் வளையும்.

இந்தக்கோடையில், வாய்ப்பு கிடைத்தால், குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்ட அவசியம் கற்றுக் கொடுங்கள். சைக்கிளை பேலன்ஸ் செய்து கொள்ளக் கற்றுக் கொள்வது போலவே வாழ்க்கை முழுவதையும் பேலன்ஸ் செய்து கொள்வதற்குத் தேவையான தன்னம்பிக்கையை அது கொடுக்கும்.

ஊருக்கு வரும்போது பள்ளி மாணவிகள் சைக்கிளில் செல்வதைக் கண்டால் உள்ளமெல்லாம் பூரிக்கும். பையன்கள் சைக்கிளில் செல்வது பெரிய விஷயமில்லை. தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் (மெய்டுகள்) சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். எவ்வளவு பெரிய வசதி அது! வீட்டுக்கு வீடு நடப்பதிலேயே எவ்வளவு நேரமும் உழைப்பும் வீணாகும்!


சைக்கிள் என்பது வெறும் வாகனமல்ல. சுயத்தின், சுதந்திரத்தின், தன்னம்பிக்கையின், தைரியத்தின் அடையாளம்.

ஒரு காலம் இருந்தது. தெருவில் அக்கம் பக்கத்து எல்லா வீடுகளுடனும் உறவுகள் இருந்த காலம் அது. எனக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்தது பக்கத்துத் தெரு அண்ணாக்கள்தான். வீட்டுக்கு டியூஷன் படிப்பதாக வந்து, வீட்டிலேயே பெரும்பாலும் பழி கிடப்பவர்கள் அவர்கள். அப்பாவின் ஆணைப்படி என்னை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று சைக்கிள் பழக்க வைத்தவர்கள் - அண்ணாதுரை, பரமசிவம், காமாட்சி என்ற மூன்று அண்ணாக்களும்தான். சைக்கிள் எல்லாம் வாங்கும் அளவுக்கு எங்கள் வீட்டில் வசதி இருந்ததில்லை. ஓசி சைக்கிள் அல்லது வாடகை சைக்கிள்தான். கற்றுக் கொடுக்க என்று சின்ன சைக்கிள் எல்லாம் எங்கள் காலத்தில் கிடையாது. பாதங்களுக்கு பெடல் எட்டுமோ எட்டாதோ, பெரிய சைக்கிள்தான். பேலன்ஸ் தவறினால் காலை ஊன்றிவிட முடியாது. அதிகபட்சமாக, சீட்டை கீழே இறக்கும் வசதி இருந்தால், ஓரிரு இன்ச்சுகள் சீட் கீழே இறக்கலாம். அதற்கு சைக்கிள் கடைக்குப் போய் ஸ்பேனர் வாங்கி சீட்டை இறக்க வேண்டும். பழக்கும் வேலை முடிந்ததும் மறுபடி சைக்கிள் கடைக்குப்போய் மேலே ஏற்ற வேண்டும்.

நாளைக்கு உனக்கு ரயில் ரோட்டுலதான் டிரெயினிங்என்று சொல்லி விட்டார்கள். அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே இல்லை. ரயில் ரோடு என்று அவர்கள் சொன்னதை, ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டச் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு சிறிய தண்டவாளத்தின்மீது எப்படி பேலன்ஸ் செய்யப் போகிறேன்... ரயில் வந்து விட்டால் என்னாகும்... என்றெல்லாம் பயங்கர கலக்கம். அடுத்த நாள் எவ்வளவோ டிமிக்கி கொடுக்க முயற்சி செய்தும் இழுத்துப் போய் விட்டார்கள். அங்கே போன பிறகுதான் மூச்சு வந்தது. பிரதான சாலையிலிருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் ஒரு பர்லாங் நீளத்துக்கு சிறிய சாலை ஒன்று உண்டு. அங்கேதான் கற்பிக்கப் போகிறார்கள்!

இதுபோல ரயில் நிலையத்துக்குச் செல்கிற சாலைகளுக்கு ரயில்வே பீட்டர் ரோடு என்று பெயர் இருக்கும். அதென்னது... எல்லா ஊர்களிலும் பீட்டர் இருந்தாரா? எங்கே பார்த்தாலும் பீட்டர் ரோடு இருக்கிறதே என்ற குழப்பம் பல காலத்துக்கு எனக்கு இருந்தது. அப்புறம்தான் புரிந்தது - அது பீட்டர் ரோடு அல்ல, ஃபீடர் ரோடு. ரயில் நிலையத்துக்கு இட்டுச் செல்லும் சாலை - feeder road! 

ரயில் நிலைய வாசலில் ஒருவர் நின்று கொண்டு என்னை சைக்கிளில் ஏற்றி ஆரம்பித்து வைத்து, சீட்டைப் பிடித்தவாறே பின்னாலேயே ஓடி வருவார். சற்றுத்தள்ளி இன்னொருவர் நின்று, முன்னவரிடமிருந்து சைக்கிளையும் என்னையும் கைப்பற்றி அடுத்த நபரை நோக்கி ஓட்டச் செய்வார். மூன்றாவது நபரை அடைந்த பிறகு, மீண்டும் சுழற்சி தொடரும்.

ஹாண்டில் பாரைப் பாக்காதே... இடுப்பை வளைக்காதே... பெடல் பண்றதை நிறுத்தாதே... குரங்குப் பெடல் போடாதே... என்ற அவர்களின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். நாம் பார்க்காவிட்டாலும் நம் கண்கள் மட்டும் ஹேண்டில் பாரின் மையத்தை அனிச்சையாக நோக்கியிருக்கும். சைக்கிள் பாட்டுக்கு ஒரு மாதிரியாக சாய்ந்து நெளிந்து நாம் அறியாமலே சாலை ஓரத்துக்குப் போகும். ஏதோவொரு கட்டத்தில் நாம் அறியாமலே சைக்கிள் நம் கட்டுக்குள் வந்திருக்கும். பின்னாலிருந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் உண்மையில் சீட்டைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை, பிடித்திருப்பது போல சும்மா நடிக்கிறார் என்று தெரிய வரும். அந்தக் கட்டம் உன்னதமானது! சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தருணம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. காமாட்சி அண்ணன் சைக்கிளைப் பிடித்திருக்கவில்லை என்று உணர்ந்த பிறகு, அதீத உற்சாகத்தில் உய்யென்று விரைவாகப் பெடல் செய்து, கீழே விழுந்து...

கடுமையான சிராய்ப்புக் காயம் ஏற்பட்ட பின்னும் கெக்கெக்கே என்று சிரித்தது அந்தத் தருணமாகவே இருக்கும்!

எங்களுக்கு நீச்சல் பழகுவதெல்லாம் கோடை விடுமுறைகளில்தான் சாத்தியம். மற்ற நாட்களில் ஆற்றில் தண்ணீர் நிறைய இருக்கும். கோடையில் அங்கங்கே சில இடங்களில் மட்டும் ஆழமாக இருக்கும். அப்படி சில இடங்கள் எங்கள் அமராவதி ஆற்றில் இருந்தன - யானைக் கட்டாயம், குதிரைக் கட்டாயம், சக்கிலியன் கெஜம். (சக்கிலி சமூகத்தைச் சேர்ந்த யாரோ எப்போதோ அங்கே மூழ்கி இறந்து விட்டதாக ஒரு கதை. யானை இறந்ததாகக் கருதப்படும் இடம் யானைக் கட்டாயம், குதிரை இறந்தது குதிரைக் கட்டாயம்.)

ஆற்றின் கரையில் ஒருபக்கம் தோப்பு. தோப்பின் வேலியை ஒட்டி யானை அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தில் சரிவாக பெரியதொரு பாறை. தெற்கிலிருந்து ஓடி வரும் தண்ணீர் அந்தப் பாறையின் ஒருபக்கம் தேங்கி நின்று வடக்கே ஓடும். ஒரு வரப்பளவுக்கு நீர் வந்தாலும் அந்த இடத்தின் வழியாகவே கடந்து செல்லும் என்பதால் எப்போதும் அங்கே தண்ணீர் இருக்கும். கடும் கோடையில் நீரும் சூடாக இருக்கும். பாறையை ஒட்டியிருக்கும் பகுதியில் 6-8 அடி ஆழமும், மணல் பகுதிக்கு வரவர ஆழம் குறைந்தும் இருக்கும். பாறையில் ஏறி டைவ் அடிக்கலாம். ஒரு நீச்சல் குளத்துக்கேற்ற அமைப்பு அங்கே இருந்தது. தொட்டு விளையாட்டும், குதிரை ஏறுதலும் என மணிக்கணக்கில் களித்துக் கிடக்கலாம். வீடு போகும்போது கண்கள் செக்கச் செவேல் என்று சிவந்திருக்கும்.


நாங்கள் சிறுவர்கள் மணல் கரையோரமாகத்தான் குளித்துக் கொண்டிருப்போம். தண்ணீர்க் கரைக்கு சற்று அப்பால் மணலில் ஒரு குழி வெட்டி, ஆற்றிலிருந்து சிறிதாக வாய்க்கால் வெட்டி அந்தக் குழிக்கு நீர் பாய்ச்சி, சட்டையால் மீன் பிடித்து அந்தக் குழிக்குள் மீன்களை விட்டு.... இப்படி முழுகவும் செய்யாமல், வெயிலில் காயவும் செய்யாமல் உடலை மட்டும் நீருக்குள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது....

பெரிய பையன்கள் திடீர் என்று நம்மைத் தூக்கி ஆழத் தண்ணீரில் போட்டு விடுவார்கள். தையா தக்கா என்று கையக் காலை அடித்து, தண்ணீர் குடித்து, திட்ட முடிந்தால் திட்டி, கெஞ்ச முடிந்தால் கெஞ்சி, ஒவ்வொரு முறை வாய்திறக்கும்போதும் வாய்க்குள் தண்ணீர் போக... கண்ணெல்லாம் சிவந்து அழுது.... அப்போது புரியும், உண்மையில் நாம் தண்ணீரில் இல்லை. அந்த அண்ணனின் கை நம் வயிற்றைத் தாங்கி இருக்கிறது என்று. இப்படி கொஞ்ச நேரம் தவிக்கவிட்டு, “ஒழுங்கா நீச்சல் பழகலே... இந்தப்பக்கமே வரக்கூடாது... வந்தே... செத்தே நீ...என்று மிரட்டி விரட்டி விடுவார்கள். அடுத்த நாள் அதே இடத்துக்கு மறுபடி போவோம். அந்த அண்ணன்கள் இருக்கிறார்களா என்று பயந்து கொண்டே தண்ணீரில் இறங்குவோம். அவர்கள் இருக்க மாட்டார்கள், அனால் வேறு அண்ணன்கள் இருப்பார்கள்.

இப்படிதான் நாங்கள் நீந்தக் கற்றுக்கொண்டோம். என்னுடன் படித்த ஜான்சன் என்பவனின் தம்பியை இதே போல ஓர் அண்ணன் தண்ணீரில் தூக்கிப்போட, அவன் மீண்டு வந்ததும் செமத்தியாக “............த் தண்ணிஎன்று கெட்ட வார்த்தைகளால் திட்டியது இப்போதும் காதில் ஒலிக்கிறது.


இப்போதெல்லாம் அப்படி கற்றுக் கொடுக்கிற அளவுக்கு ஆறுகளில் நீரும் இல்லை. ஆற்றுக்குப் போய் குளிக்கிறவர்களும் இ்லலை. குளிக்கப் போனாலும் கற்றுக் கொடுக்கிறவர்களும் இல்லை.

ஆக... பக்கத்தில் நீச்சல் குளம் / ஆறு / கிணறு இருந்தால், குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வாய்ப்பு இருந்தால், இந்தக் கோடையை வீணடித்து விடாதீர்கள்.

Wednesday 3 May 2017

உயிர்த்துளிகள் சேமிப்போம்

பூமியில் உள்ள மொத்த நீரில் 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர் - Freshwater. அந்த 2.6% நீரிலும் ஏறக்குறைய முக்கால்வாசி போலார் துருவப்பகுதியில் இருக்கும் பனிமலைகள். அது எல்லாம் போக, ஆறுகளில் குளம் குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும்? இதைத்தான் நாம விவசாயம், தொழிற்சாலை, குடிநீர், கட்டுமானம் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். படத்தைப் பாருங்கள். பெரிய துளிதான் 2.6% நன்னீர். சிறிய புள்ளிதான் நமக்குப் புழங்குவதற்குக் கிடைக்கும் நீர்.



ஒவ்வொரு துளியும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிய மேற்கண்ட விவரம் போதும், இது வெறும் நீர் அல்ல, உயிர்த்துளி. நீரை சேமிப்பது தொடர்பான செய்திகள் பள்ளிப் பருவத்திலிருந்தே நமக்குத் தெரிய வருகிறது என்ராலும் எல்லாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. குறிப்புகள் எல்லாமே எல்லாருக்கும் தெரிந்திருக்காது. அவரவர் தம்மால் முடிந்த அளவில் சிக்கனத்தைப் பின்பற்றினால், நாம் சேமிக்கும் நீர் வேறு ஒருவருக்கு உதவியாக இருக்கும். அதற்காக சில குறிப்புகளை தொகுத்து கீழே தருகிறேன். (நல்லதொரு பிளம்பரைப் தேடிப் பிடித்து தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள்.)

சமையலறை, கழிப்பறை, குளியலறை, தோட்டம் என எல்லா இடங்களிலும் இருக்கும் குழாய்களில் கசிவு இருக்கிறதா என்று பார்த்து சரி செய்ய வேண்டும். ஒரு நொடிக்கு ஒரு சொட்டு என விழுந்தாலும் ஒரு குழாயில் ஒரு நாளில் வீணாகும் நீரின் அளவு சுமார் 20-25 லிட்டர்!
மாடியில் இருக்கும் தண்ணீர்த் தொட்டிக்கு நீர் ஏற்றும்போது, நீர் நிறைந்ததும் மோட்டார் தானே அணையும் வகையில் ஏற்பாடு செய்யலாம். அல்லது தொட்டியில் நீர் நிறைவதை கவனமாகப் பார்த்திருந்து உடனே மோட்டாரை நிறுத்தவும்.
தொட்டியில் தண்ணீர் குறைந்தவுடன் தானாகவே நீர் ஏற்றும் தானியங்கி மோட்டார் அமைப்பு இருந்தால், தொட்டியிலிருந்து கசிவு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் நீர் வீணாவது நமக்குத் தெரியாமலே போய்விடும்.
மொட்டை மாடியிலிருந்து வரும் மழை நீரை சேமிக்க ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளலாம். நிலத்தில் குழி வெட்டி சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். டிரம்களில் சேமித்து வைத்தால் வாகனங்களைக் கழுவப் பயன்படுத்தலாம்.
பல் துலக்கும்போது பிரஷ் நனைத்தவுடன் வாஷ் பேசினில் குழாயை அடைத்து விடுங்கள். (ஒரு நிமிடத்தில் 6 லிட்டர் வரை வீணாகும்.)
சவரம் செய்யும்போது வாஷ் பேசின் குழாயை மூடி விட வேண்டும்.
ஷவரில் குளிப்பதைத் தவிர்க்கலாம். பக்கெட்டில் பிடித்து வைத்துக் குளிக்கலாம்.
கைகளைக் கழுவும்போது, சோப்பைத் தேய்க்கும் நேரத்தில் குழாயை மூடி வைக்கவும்.
நவீன வாழ்க்கை இப்போது எல்லா வீடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை உருவாக்கிவிட்டது. பழைய கமோடுகளில் பக்கெட்டால் தண்ணீர் ஊற்றிவிடலாம். வெஸ்டர்ன் முறை கமோடுகளில் ஃப்ளஷ்தான் செய்ய முடியும். ஒவ்வொரு முறை ஃபிளஷ் செய்யும்போதும் சுமார் 6 லிட்டர் வரை தண்ணீர் செலவாகிறது. இதைக் குறைப்பதற்கு மேலை நாடுகளில் Cistern Water Displacement Device என்ற ஒரு பையைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய தொழில்நுட்பம் ஏதும் கிடையாது. யூடியூப் வீடியோவில் பார்த்து நாமும் வீட்டிலேயே செய்துவிட முடியும். ஒவ்வொரு முறையும் 2 லிட்டர் வரை சேமிக்க முடியும். பழைய தண்ணீர் புட்டிகளில் அடிப்பக்கத்தில் கூழாங்கற்களை நிரப்பி, இறுக மூடி, ஃப்ளஷ் தண்ணீர் தொட்டியில் போட்டு விடலாம். இதனால், ஒவ்வொரு முறை அழுத்தும்போதும் வெளியாகும் நீரின் அளவு குறையும்.
கழிப்பறை கமோடில் ஃப்ளஷ் தொட்டியிலிருந்து நீர் கசிந்து கொண்டே இருக்கக்கூடும். இது நம் கவனத்துக்கு வராமல் இருக்கலாம். தொட்டி நீரில் ஏதாவதொரு நிறமூட்டியைக் (மஞ்சள் தூள் / ஜிலேபி பவுடர்) கலந்துவிட்டுப் பார்த்தால், கமோடில் வண்ண நீர் கசிவது தெரிந்து விடும். கசிவை சரி செய்யலாம்.
கழிப்பறை கமோடில் டிஷ்யூ பேப்பர், சிகரெட் துண்டுகள் போன்றவற்றைப் போட வேண்டாம். இதனால் அதிக நீரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
வாஷிங் மெஷின் பயன்படுத்தும்போது, இயன்றவரையில் முழு கெபாசிட்டிக்கும் துணிகளைப் போடுஙகள். பயன்படுத்திய நீரை தோட்டத்துக்கு அல்லது வாசலுக்குப் பயன்படுத்தலாம்.
வீட்டை தண்ணீர் ஊற்றிக் கழுவுவதைத் தவிர்த்துவிட்டு, ஈரத்துணியால் துடைக்கலாம்.
சமையலறையில் பாத்திரம் துலக்கும்போது குழாயில் தண்ணீரைத் திறந்து வைக்கக் கூடாது. பாத்திரத்தில் பிடித்துவைத்துக் கழுவினால் நிறைய மிச்சமாகும். (வேலைக்காரர்கள் தாராளமாகத் திறந்து வைத்துப் பழகிப் போயிருக்கிறார்கள். அவர்களுக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.)
சமையலறைக் குழாயைத் திறந்து விட்டு காய்கறிகளைக் கழுவ வேண்டாம். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றிக் கழுவலாம். (கழுவிய நீரை பறவைகளுக்காகவோ செடிகளுக்கோ பயன்படுத்தலாம்.)
வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் நிரப்பிய போத்தலைப் பயன்படுத்தலாம். டம்ளர்களைக் கழுவும் வேலையும் மிச்சம்.
ஃபிரிஜ்ஜிலிருந்து டீஃப்ரோஸ் செய்த பிறகு எடுத்த நீரை செடிகளுக்கு அல்லது வாசலுக்கு ஊற்றலாம்.
ப்ரீசரில் சேர்ந்துவிட்ட ஐஸ் கட்டிகளை சுத்தம் செய்த பிறகு, அவற்றை செடிகளுக்குப் பயன்படுத்தலாம், அல்லது பறவைகளுக்கான தொட்டியில் போடலாம்.
காரைக் கழுவும்போது ஹோஸ் பைப்பில் தண்ணீர் பீய்ச்சிக் கழுவ வேண்டாம். பக்கெட்டில் பிடித்து துணியால் துடைக்கலாம். (தில்லியில் ஒரே ஒரு பக்கெட் தண்ணீரில் காரை சுத்தமாகக் கழுவித் துடைத்து விடுகிறார்கள் வேலைக்காரர்கள்.)
தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்த வேண்டாம். பூவாளியைப் பயன்படுத்துங்கள். (ஹோஸ் பைப்பில் ஒரு மணி நேரத்தில் 500 முதல் 1000 லிட்டர் வரை நீர் வரும்.)
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை காலையிலும் மாலையிலும் செய்வதால் நீர் ஆவியாகி வீணாவதைத் தவிர்க்கலாம்.
தோட்டச் செடிகளுக்கு, புல்தரைக்கு நீர் விடும்போது, தரை எவ்வளவு உறிஞ்சுமோ அந்த அளவுக்கு மட்டும் தெளியுங்கள். தேங்கும் அளவுக்கு வீணாக்காதீர்கள்.
செடிகளுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு ஊற்றினால் போதும், அதிகம் ஊற்றினாலும் வேர்கள் அழுகி செடிகள் செத்துப்போகும்.
தோட்டத்தில் விழுந்து கிடக்கும் சருகுகளை சுத்தம் செய்தாக வேண்டியதில்லை. சருகுகள் நிலத்தை ஈரமாக வைக்கவும், நீர் ஆவியாவதைத் தடுக்கவும் உதவும்.
செடிகளுக்கு, தோட்டத்துக்கு, வாசலுக்கு தண்ணீர் விடும்போது தெளித்தால் போதும். நீரை ஓட விட வேண்டாம்.
வீட்டின் வெளிப்புற கான்கிரீட் தளங்களை சுத்தம் செய்ய ஹோஸ் பைப்பால் நீரைப் பீய்ச்சி வீணாக்க வேண்டாம். துடைப்பத்தால் கூட்டிப் பெருக்கினால் போதும்.
தோட்டத்துக்கு அன்றாடம் நீரூற்ற வேண்டும் என்பதில்லை. இரண்டு அங்குல ஆழத்தில் மண் ஈரமாக இருந்தால், நீர் விடத் தேவையில்லை. தண்ணீர் குறைவாக இருந்தால், அதற்கேற்ப தம்மைத் ததவமைத்துக் கொள்ளும் செடிகளின் வேர்கள் ஆழமாக உள்ளே இறங்கவும் கூடும்.
புதிய செடிகளை வாங்கும்போது, குறைந்த நீரில் வளரக்கூடிய செடிகளை தேர்வு செய்யலாம்.
மீன் தொட்டியை சுத்தம் செய்த நீரை தோட்டத்துக்கு / செடிகளுக்கு ஊற்றலாம்.
நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை தோட்டத்தில், புல்வெளியில் தெளிப்பான் மூலம் குளிப்பாட்டலாம். குட்டிக் குழந்தைகளையும். இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

மேலே சொன்னதெல்லாம் வாய்பேசத் தெரிந்த மனிதர்களுக்கு. மனிதர்கள் எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். நம்மை வருத்தும் தண்ணீர்ப் பஞ்சம் பறவைகள் விலங்குகளையும் வருத்தும்தானே? மொட்டை மாடிகளில், காம்பவுண்ட் சுவர்களில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்க முடியுமா என்று யோசியுங்கள்.


தண்ணீர் சேமிப்பு, சிக்கனம், குழாய்களை இறுக மூடி வைப்பது உள்பட முக்கியமான விஷயங்களை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். இளமையில் கற்பி - Catch them young. அக்கம் பக்கத்தினருடன், குடியிருப்போர் நலச் சங்கத்துடன், வாய்ப்புக் கிடைக்கும் சந்திப்புகளில், இதைப்பற்றி உரையாடி நீரை சேமிக்கும் யோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.